Sunday, January 18, 2015

பொங்கலோ பொங்கல்

அலுவலகம் செல்லும் அவசரத்தில் 
அதி வேகமாய் சமைத்த உடனடி பொங்கலை 
இரவில் நுண்ணலை அடுப்பில் சூடெற்றி 
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் 
என்று சன்னமாய் கூவியபோது 
ஞாபக அலைகள்  பல்லாண்டு பின்னோக்கி சென்றன!

புளி போட்டு தேய்த்த பித்தளை பாத்திரத்தில் 
சந்தனம்  பூசி குங்கும பொட்டிட்டு 
கழுத்தில் மஞ்சள் கொத்து பாந்தமாய் தொங்க 
வெல்லம் அரிசி தளதளக்கும் தண்ணீரில் 
களுக் களுக்கென சப்திக்க
எல்லாம் ஒன்று கூடி பொங்கி வரும்போது 
அக்கா அம்மா அண்ணன் தம்பி தந்தை 
அனைத்து சுற்றமும் உற்சாகமாய் 
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் 
 என ஒரு சேர ஆர்ப்பரிக்க....

நுண்ணலை அடுப்பு பணி முடித்தபோது
மெய் சிலிர்த்து நிகழ்வுக்கு மீண்டு வந்தேன்.

இனிய நினைவுகள் மனம் விட்டு நீங்குவதில்லை 
திரும்பி பார்க்க வைத்த பொங்கல் திருநாளுக்கு நன்றி!!
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!